தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் ‘ஒரு போலிப் போராட்டம்’ என வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்,
”எமது தொடர்ச்சியான போராட்டம் இன்று 2044ஆவது நாளை எட்டியுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை சிங்களவர்கள் ஒருபோதும் அகற்ற மாட்டார்கள்.
தமிழரை ஏமாற்றுபவர்
PTA என்ற பெயரை தேசிய பாதுகாப்புச் சட்டம் என்று மாற்றுவது பற்றி ஒரு பேச்சு உள்ளது. இது சர்வதேச சமூகங்களை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவை ஏமாற்றும் செயற்பாடே.
சுமந்திரன் யுத்தத்தின் போதும், அதற்குப் பின்னரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு ஆதரவாக இருந்தமை ஒரு விசித்திரமான நடத்தையாகும். அவர் தனது கற்பனை தமிழ் எதிரிகளிடமிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தினார்.
அவர் ஒரு சூழ்ச்சிப் பொய்யர் மற்றும் தமிழரை ஏமாற்றுபவர் என்பதை நாம் நிரூபிக்க முடியும்.
சர்வதேச விசாரணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டதாகக் கூறிய அவர், இப்போது சர்வதேச விசாரணைக்கு ஐ.சி.சி அழைப்பு விடுக்கும் என்று கூறுவதன் மூலம் அவர் ஒரு பெரிய பொய்யர் என்பதை காட்டுகிறார்.
போருக்குப் பின்னர், நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட காலத்தில், சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி 25 தமிழர்களைக் கைது செய்தார்.
30 தொடக்கம் 40 வரையிலான சிங்கள விசேட அதிரடிப்படையினரை தமிழ் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க சுமந்திரன் பயன்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவர் எப்போதும் தமிழ் தேசியத்தை எதிர்க்கும் மக்களுக்கு உதவுகிறார். இதனால் தான் அவர் கே.கே.எஸ் இல் இருந்து ஹம்பாந்தோட்டை வரை கையொப்பங்களை சேகரிப்பதற்காக ஒரு பெரிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.
தமிழர்களுக்கு தேவை இறையான்மையே
தனது அரசியலுக்காகவும், கொழும்பில் ஒரு தமிழனாக தனது பாதுகாப்பான வாழ்வுக்காகவும் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் அவர் திருப்திப்படுத்துகிறார்.
சிங்களக் கொடூரச் சட்டத்திலிருந்து எம்மை விடுவிப்பதற்கும் எமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கும் இன்னும் பல தேவைகளுக்கும் தமிழ் இறையாண்மை வேண்டும்.
தமிழர்களுக்கு உதவ முன் வாருங்கள் என்று ஒவ்வொரு தமிழனும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அழைக்க வேண்டும்” என்றனர்.