Uncategorized

குழம்பிப்போன கல்வி .


 Are you preferred to wear?

“Never sir,I don’t going to change my dress.!”

மார்க்கமில்லாத கல்வி, ஒழுக்கமில்லாத வாழ்வுக்கே

வழியமைக்கும்.ஒழுக்கமில்லாத கல்வி எதனை நோக்கி அழைத்துச்செல்லும் என்று நான் வியாக்கியானம் செய்யத் தேவையில்லை. 

சில வேளை அந்தத் தலைமை அதிகாரியும் இப்போது இதனை வாசித்துக் கொண்டிருக்கலாம்.  மிக நல்லதுதான்! 

நகரப் பிரதேசமொன்றில் உள்ள பிரபலம் வாய்ந்த சர்வதேச பாடசாலைக்கு ஆசிரியர் இணைப்பிற்காக இவ்வாரம்  சென்றிருந்தேன்.குறித்த பாடசாலையின் ஆசிரியர்களது ஆடை குறித்தான கருத்தாடலில் குறிப்பிடப்பட்ட விடயம் மிகவும் வருத்தமளித்தது.

எவ்வளவுதான் சமத்துவம்,இன நல்லிணக்கம் தொடர்பில் கதைத்தாலும் முன்னெடுப்புகளை மூச்சு முட்ட எடுப்பினும் சில நிகழ்வுகள் எமது நாடு முன்னேற முடியாமல் திணருவதற்கான உண்மையான காரணங்கள் இதுவென உறுதியாகின்றன.ஏனெனில், மிகவும் தேவையான, தகுதிவாய்ந்தவராயினும் சில கற்பிதங்கள் அவர்களைத் தடுக்கின்றன.

இங்கு அதிகமான முஸ்லிமல்லாத மாணவர்கள் கல்வி கற்பதனால் இங்கு கற்பிக்கின்ற முஸ்லிம் ஆசிரியர்கள் ஒன்று டீ சேட்டும் ட்ரௌசரும் (T-Shirt with Trouser) அணிந்து ஹிஜாப் போட வேண்டுமாம்,அல்லது டொப் உடன் ட்ரரௌஸர் (Top with Trouser) அணிய வேண்டுமாம்.

ஏனென்று தெரியுமா?

கல்வி நிலையத்தில் மார்க்கம் பற்றிய கதையே இருக்கக் கூடாதாம்.

“….We don’t like to make any conflicts  between any religions”

ஒரு ஆடையே வன்முறையைத் தூண்டுகின்றது என்றால் ஆடைக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை என்பதை உணராத பெரிய தொகை மாணவர்கள்  வெளியேறும்  சமூகத்தில் எத்தகைய வன்முறைகள் ஏற்படும்?

இது,குறித்த பாடசாலைத் தலைமைப் பொறுப்பாளரின்  பொறுப்பில்லாத தன்மையை எந்தளவு  வெளிப்படுத்துகிறது?

மார்க்கத்திற்கும் கல்விக்கும் சம்பந்தமே இல்லாதிருக்கட்டுமே.அப்படித்தான் மார்க்கம் பற்றிய எந்த எண்ணங்களும் மாணவர்களிடம் வளரக்கூடாது எனின், முஸ்லிம் பெண்கள் வெளிக் கிளம்பும் ஆடைக்கும் கல்விக்கும் மட்டுமா சம்பந்தமில்லாமல் போனது?அப்படியாயின் இந்த ட்ரௌஸர் மற்றும் டீ சேர்ட் எந்தக்  கல்விக்கோட்பாடுடன் சம்பந்தப்படுகின்றது?

இவ்வளவு படித்துவிட்டு பெரியதொரு அமானிதமான தலைமைப்பொறுப்பை சுமந்துகொண்டிருக்கும் ஒரு தலைமையதிகாரி, கலாசாரத்தையும் கல்வியையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருப்பது எதிர்காலத்தில் குறித்த பாடசாலையில் உருவாகிக் கொண்டிருக்கின்ற பெரிய பதவிகளில் அமரப்போகின்ற மாணவர்களின் மனநிலையை நாம் என்னவென்று அளவிடுவது?

சர்வதேசப் பாடசாலை என்று சர்வதேச நாடுகளின் கல்விக்கொள்கையை மட்டும் ஏட்டுச் சுரைக்காய் போல கற்றுவிட்டு சென்றால் போதாது.

அனைத்து இனத்தவர்களுடனும் அவர்களின் இனம்,உடை,கொள்கைகளுக்கு அப்பால் எவ்வித மனப்பயமின்றி அந்நியோன்யமாகப பழகும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துவதுதானே இன்றைய பெரியவர்களின் பொறுப்பு?

அங்கு எந்த ஒரு மாணவர்களும்,குறிப்பாக சொல்வதாயின் ப்ளே க்ரூப்(Play Group) சிறுவர்கள் கூட ஹபாய் மற்றும் ஹிஜாப் அணிந்து வந்திருந்தவர்களை வித்தியாசமாகவோ, பயத்திலோ பார்க்கவே இல்லை.

அந்த அளவு பக்குவப்படுத்தி வளர்த்துள்ள பெரும்பான்மை பௌத்த,மற்றும் இந்து, கிறிஸ்தவ சமூகப் பெற்றோரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

எமக்குத் தெரியும்,மிக அண்மை வருடங்களில் எமது பெண்களின் உடையைக் கண்டால் அவ்வளவு அலர்ஜி.இன, மத பேதமின்றி 

மனிதத்தை எங்கும் மதிக்கும் கலாசாரம்  ஓரளவுக்கு மக்கள்  மத்தியில் வளர்ந்துள்ள நிலையில் மீண்டும் மீண்டும் பழைய ஸ்டீரியோடைப்(Stereotype) இனுள்ளே அழைத்துச் செல்வது எவ்வளவு முட்டாள்தனமான விடயம்?அதுவும், அறிவு நிறைந்த கலசங்களே இவ்வாறு ததும்புகின்றது எனின் அரைகுறை அறிவாளிகளின் நிலையைக் கேட்கவே வேண்டியதில்லை.

சமத்துவத்தையும் இன நல்லிணக்கத்தையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஆடையின் வடிவத்தையும் கல்வியையும் குழப்பிப்கொள்ளக்கூடாது.

எதிலிருந்து எது ஆரம்பமாகி எதில் முடிவடைகிறது என எக்காலத்திலும் கண்டுபிடிக்க முடியாது.ஏனெனில், இது ஆய்வுக்குட்படுத்தக்கூடிய தலைப்பல்ல.அப்படியே உட்படுத்தினாலும் அதன் முடிவு இன்னோர் ஆய்வின் தலைப்பாக முடிவடையுமே தவிர அதற்கு விடை கிடைக்கப்போவதில்லை.

ஆய்வுக்குட்படுத்த வேண்டியதெல்லாம்,இவ்வாறான சூழ்நிலையில் வளரக்கூடிய மாணவர்களின் மனநிலையைத்தான்.

ஆக, கல்வி என்பதனூடாக அடையப்பட வேண்டிய மிக முக்கியமான சமத்துவம் இங்கு புறக்கணிக்கப்படுகின்றது.சமத்துவம் என்பது ஆரம்ப கல்வி  தொடக்கம் உயர்தரப் பிரிவு வரை ஒரே பாடத்திட்டத்தைக் கற்பிப்பதல்ல.மாறாக,குறித்த வகுப்பிற்கு ஏற்ப அவர்களது பாடத்திட்டத்தை வழங்குவதே என்பதை ஒரு சாதாரண குடிமகனால் கூட புரியப்பட்டுள்ள விடயம்.

பௌத்தரோ,இந்துவோ,இஸ்லாமியரோ,கிறிஸ்தவரோ யாராக இருப்பினும் ஒழுக்கமான ஆடையை அணிந்து வரும்போது எந்த இடமும் நல்ல இடமாகவே இருக்கும்.

அது அவ்வாறிருக்க,சமத்துவம் என்பதனை வேறுவிதமாகக் கற்பிதம் செய்து,வன்முறை,கலாசாரம் என பொருத்தமே இல்லாமல் கதைத்துக்கொண்டு கல்விமான் என உயர் பதவிகளில் அமர்பவர்கள் கூறிக்கொள்ளக்கூடாது.

இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய இன்னோர் விடயம், எமது முஸ்லிம் மாணவிகள் பதவிக்காக எப்படியும் ஆடையை மாற்றிக்கொண்டு அரைவாசி முஸ்லிமாகவும் இன்னும் அரைவாசி கூற முடியாதளவு அசிங்கமாகவும் உடுத்திக்கொண்டு கலாசாரமே அற்றவர்களாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.மார்க்கத்தை காலில் போட்டு மிதிக்கும் இவ்வாறானவர்கள் இருக்கும் வரை இஸ்லாம் பற்றிய தெளிவு மற்றவர்களுக்கு எங்கணம் வரப்போகின்றது?

பதவிகளில் அமர்ந்துவிட்டால் உலகமே என் கையில் என வாழ்ந்துகொண்டிருக்கும் உயரதிகாரிகளும்,இவ்வாறாக மார்க்கத்தை வீசி விளையாடுபவர்களும் எமது இறுதி மீள்தல் இறைவனிடமே என்பதை  நினைவிற்கொள்ளட்டும்!

பிற்குறிப்பு:  குறித்த ஒரு அதிகாரி செயற்பட்ட விதத்தினூடாக பிரபலமான ஒரு சர்வதேசப் பாடசாலையின் பெயருக்கு எவ்விதத்திலும் கலங்கம் ஏற்படாதவாறே கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன.அத்துடன் இங்கு எ ந்த ஒரு இடத்திலும் பாடசாலை யின் பெயரோ, குறித்த நபர்களின் பெயரோ எழுதப்படவோ, எவ்விடத்திலும் பகிரப்படவோ இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.

எதிர்காலங்களில் கல்வியின் பெயரால் மார்க்கத்தை மறந்து செயற்படும் நிலை மாற வேண்டும் என்பதே இக் கட்டுரையின் தூய நோக்கமாகும்.அத்துனைக்கும்

 அங்கு தலைமையில் இருந்தவர் ஒரு முஸ்லிம் என்பதே இங்கு மிகப்பெரும் கவலையான விடயமாகும்.

_

Binth Fauzar(SEUSL)©

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *