செய்திகள்

தலையில்லாத மனித உடலை காவிச்சென்ற முதலை – பிள்ளைகளின் பசியை போக்க மீன்பிடிக்கச் சென்றவருக்கு ஏற்பட்ட துயரம்


 அக்குரஸ்ஸ –  ஹூலந்தாவ பிரதேசத்தில் மனதை வருத்தும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

நில்வலா கங்கையில் முதலை ஒன்று தலையில்லாத மனித உடலை காவிச்செல்லும் காட்சியை ஹுலந்தாவ – பதோவிட்ட கிராம மக்கள் கண்ணுற்றுள்ளனர். 

நேற்று -28- மாலை முதலை ஒன்று தலை இல்லாத மனித உடலை கரைக்கு எடுத்துவர முயற்சித்த போது, அங்கு  கூடியிருந்த பிரதேசவாசிகளைக் கண்டதும் வாயில் கவ்வியிருந்த மனித உடலுடன் மீண்டும் அது ஆற்றுக்குள் சென்று மறைந்துவிட்டது. 

அதனைத் தொடர்ந்து மனித உடலைத் தேடும் முயற்சியை பிரதேச வாசிகள் இன்று மாலை வரை முன்னெடுத்திருந்த போதிலும் அது பலனளிக்கவில்லை.

அந்த உடலில் காணப்பட்ட ஆடை  கிராமத்திலிருந்து நேற்று மாலை முதல், காணாமற்போயிருந்த பழனிச்சாமி ஆறுமுகம் அணிந்திருந்த ஆடையுடன் ஒத்திருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 

இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான பழனிச்சாமி ஆறுமுகம் தோட்டம் ஒன்றில் கூலி வேலை செய்து வந்தவர்.  அதிலிருந்து கிடைக்கும் 700 ரூபா நாட்கூலி தமது இரண்டு பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்கு போதாமையால், அவர் மீன் பிடிப்பதையும் தனது தொழிலாக  புதிதாக இணைத்துக்கொண்டிருந்தார்.

தோட்டத்தில் வேலை செய்யும் ​போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் கூலி வேலை செய்யவும் முடியாமற்போயுள்ளது.

தாய் இன்றி தவிக்கும் தனது பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக வேறு வழியின்றி நேற்று மாலை நில்வலா கங்கைக்கு சென்ற ஆறுமுகம் மீண்டும் வீடு திரும்பவில்லை.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *