உலக வங்கியின் கணிப்புகளின்படி அடுத்த ஆண்டில் இலங்கை 10 பில்லியன் டொலருக்கும் மேலான பொருளாதார சரிவை சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், 2023 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமைக்கு செல்லலாம் என சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக கற்கைப் பிரிவின் துறைத்தலைவர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கம் வரிகளை அதிகரித்தால், பொருளாதார சரிவு வேகம் அதிகரிக்கும் என்பதுடன் வங்கி உட்பட நிதி கட்டமைப்புகள் மட்டுமின்றி அவற்றுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் ஆபத்து உள்ளாகலாம்.
பொருளாதார அதிர்வு
அரசாங்கம் மேலும் வரிகளை அதிகரிக்க முயற்சித்தால், அது முழு நாட்டு மக்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும். அதேபோல் வட்டி வீதத்தை அதிகரித்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
அது இலங்கை மத்திய வங்கி எடுக்க வேண்டிய நடவடிக்கை. எனினும் அது பொருளாதாரத்தில் அதிர்வை ஏற்படுத்தும். பொருளாதாரத்திற்கு ஏற்படும் இந்த அதிர்வு ஏனையவற்றிலும் பிரதிபலிக்கும்.
வர்த்தகர்களுக்கு பிரதான பாதிப்பு ஏற்படும்.
அவர்கள் வங்கியில் கடன்களை பெற்றே மூலதனத்தை திரட்டுகின்றனர். வங்கியில் கடனை பெற செலவு செய்ய வேண்டும். அபிவிருத்தியடைந்து வரும் நாடு ஒன்றின் முதலீடுகள் மூலம் கிடைக்கும் பிரதிபலன்களில் 10 முதல் 15 வீதமான இலாபமே கிடைக்கின்றது.
வட்டி 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டியில் கடனை பெற்று முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் இலாபமானது, பெற்ற கடனுக்கான வட்டியை செலுத்தவும் போதுமானதாக இருக்காது.
நிதிக் கட்டமைப்புக்கான ஆபத்து
இதன் காரணமாக அனைத்து வர்த்தகங்களும் நிலையற்ற நிலைமைக்கு சென்றுள்ளன. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் மட்டுமல்ல மிகப் பெரிய வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
புதிதாக வர்த்தகங்களை ஆரம்பிப்பது சீர்குலைந்து போயுள்ளது. இதனால், இலங்கை பொருளாதாரம் சரிந்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியம் கடன் மறுசீரமைப்புக்கு செல்லுமாறு ஆலோசனை வழங்கியுள்ளதால், கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்த முடியாத நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
இப்படியான நிலைமையில், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது மற்றும் பொருளாதாரத்தை முன்நோக்கி தள்ளும் வங்கி உட்பட நிதி கட்டமைப்புகள் மட்டுமின்றி அவற்றுடன் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களும் பெரிய ஆபத்தை சந்திக்கலாம்” என்றார்.