செய்திகள்

போரத்தொட்டயில் அதிகரிக்கும் சிறுநீரக நோயாளிகள் – விழிப்புடன் செயற்படுவது அவசியமென்கிறார் வைத்தியர் லியாவுதீன்– Ismathul Rahuman –

  நீர்கொழும்பு, போரத்தொட்ட பிரதேசத்தில் சிறுநீரக நோயாளிகள் கூடுதலாக இனங்கானப்படுவதை கருத்தில் கொண்டு போரத்தொட்ட அபிவிருத்தி மன்றத்தினால் “வருமுன் காப்போம்” என்ற தொனிப்பொருளில் வைத்திய சிகிச்சை முகாம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை நடாத்தினர்.

  கம்மல்துறை, தக்கியா வீதி ரஸ்னா திருமண மண்டபத்தில் முற்றிலும் இலவசமாக நடாத்தப்பட்ட இச் சிகிச்சை முகாமில் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 டாக்டர்கள் பங்குகொண்டு சிகிச்சையளித்தனர்.

   இங்கு சுமார் 850 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

  வந்த நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வூட்டும் நிகழ்சிகளையும் நடாத்தினர். 150 பேர்களுக்கு இரத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

   இவ் வைத்திய முகாம் தொடர்பாக போரத்தொட்ட அபிவிருத்தி மன்றத் தலைவர் டாக்டர் லியாவுதீன் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது பிரதேசத்தில் அண்மைக்காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளதாக தெரியவந்தது. நோய் முற்றிய நிலையிலேயே பலர் சிகிச்சைக்குச் செல்கின்றனர். இதனை ஆலோசித்த எமது மன்றம் மக்களை நோய்லிருந்து பாதுகாக்கும் நோக்கில் மக்களை விழிப்பூட்டி நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிவதற்காக வைத்திய சிகிச்சை முகாம் ஒன்றை நாடாத்த திட்டமிட்டோம்.

    சிறுநீரக நோய்க்கான அடிப்படைக் காரணங்களில் மக்கள் தெளிவில்லை எனக் கூறும் டாக்டர் லியாவுதீன் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய்களுக்கும் மக்கள் உரியமுறையில் சிகிச்சையை பெற்றுக்கொள்வதில்லை.

 நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்கள் உச்சகட்டத்தை அடைந்ததும் நோய்யின் பக்கவிளைவாக கண் பார்வை குறைதல், கால்களின் பகுதிகளை கட்டம்கட்டமாக துண்டித்தல், பக்கவாத நோய், சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை என்பவற்றை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றன.

   சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக சுமார் 60-65 இலட்சம் ரூபா தேவைப்படுகின்றன. இந்த பாரிய தொகையை ஈடுசெய்ய முடியாதவர்கள் பணவசூலுக்காக ஊர் ஊராகச் செல்கின்றனர். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டே நோயாளிகள் தொடர்ச்சியாக மருந்து பாவிக்க வேண்டும் என்பதையும் நோயை ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் கண்டு கொள்ளவதற்காகவும் தெளிவூட்டும் நிகழ்ச்சியாக இந்த மெடிகல் கேம்பை நடாத்துகிறோம் என்றார். தேவையேற்பட்டால் தொடர்ந்தும் இவ்வாறான வைத்திய முகாம்களை நடாத்துவோம் எனக்கு கூறினார்.

இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதும் அதற்கேற்ப தேவையானவர்களை நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *