Uncategorized

தேசிய கொள்கைகள் இல்லாத ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது கடினம்


– இன்றைய உலக குடியிருப்பு தின செய்தியில் ஜனாதிபதி

இன்று (03) உலக குடியிருப்பு தினமாகும். Mind the Gap. Leave No One and Place Behind (இடைவெளியை அவதானி. யாரையும் பின்னால் விட்டுவிடாதே) எனும் எண்ணக்கருவில் இம்முறை உலக குடியிருப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

இன்றையதின உலக குடியிருப்பு தினத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள செய்தி வருமாறு… 

இழந்த பொன்னான வாய்ப்புகளுக்காக வருந்துவதற்குப் பதிலாக, உளப்பாங்கு ரீதியிலான விழிப்புணர்வினால் மட்டுமே நிகழ்கால மற்றும் எதிர்கால வாய்ப்புகளை அனைவரின் நலனுக்காகப் பயன்படுத்த முடியும். 36 ஆவது உலக குடியிருப்பு தினத்தை கொண்டாடும் உங்களை இப்பணிக்காக அழைக்கிறேன்.

நாம் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. நம்மை விட குறைந்த சமூக-பொருளாதார நிலையைக் கொண்டிருந்த பிராந்திய மற்றும் உலகில் உள்ள பல்வேறு நாடுகள் ஏற்கனவே நம்மைக் கடந்து சென்றுவிட்டன. ஏற்றுமதியை அடிப்படையாகக்கொண்ட புத்தாக்க பொருளாதாரத்தின் மூலம் நிலையான அபிவிருத்தியை அடைய உதவும் நீண்டகால தேசிய கொள்கைகள் இல்லாத ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது கடினமானதொரு பணியாகும்.

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட எதிர்பார்த்துள்ள இவ்வேளையில், எமது அடுத்த 25 வருட திட்டங்களில், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் என்றென்றும் சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே நம்  அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அதற்காக, அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் ஏற்கனவே செயற்பட்டு வருகின்றோம். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 வீடுகள் நிர்மாணிக்கும் பணியை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவை பெருநகரங்களில் மட்டுமின்றி சிறுநகர்ப்புறங்களிலும் நிர்மாணிக்கப்படவுள்ளன. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை திறனாகவும் மனிதாபிமானமாகவும் தீர்ப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். அவை கையளிக்கப்படும்போது, தனிநபர் துதிபாடல்களுக்கு அப்பால் “பொறுத்தமானவருக்கே உரிமையாகும்” வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.

இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் நம்மீது அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களை உணர்வுபூர்வமாக உற்றுநோக்கி தன்னம்பிக்கையுடன் தகுந்த பதில்களை வழங்குவது அனைவரின் பொறுப்பாகும். ஏற்படக்கூடிய பிரச்சினைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும், அவற்றை வெற்றிகரமாக சமாளிக்கும் வகையில் நீண்ட காலக் கொள்கைகள், சட்டங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்குவது, காலத்தின் தேவையாகும். நாட்டுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை நான் காண்கிறேன்.

எவரையும் கைவிடாத, இடைவெளி இல்லாத, பிற்படுத்தப்படாத மனிதர்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்க ஆழ்ந்து ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நினைவு கூர்ந்து, 2022 உலக குடியிருப்பு தினக் கொண்டாட்டத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *