செய்திகள்

கொள்ளையை தடுத்த சார்ஜெண்ட் உப பரிசோதகரானார் – 25 இலட்சம் ரூபா பணப்பரிசுடன், வீரப் பதக்கமும் வழங்கிவைப்பு


தம்புத்தேகம தனியார் வங்கி ஒன்றின் முன்னால் இடம்பெற்ற கொள்ளையை தடுத்து, இரு கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த சார்ஜெண்ட் புத்திக குமார (42313), பொலிஸ் உப பரிசோதகராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருக்கு பொலிஸ் பரிசு நிதியத்திலிருந்து ரூ. 25 இலட்சம் பணம் மற்றும் பொலிஸ் வீரப் பதக்கமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி தம்புத்தேகமவிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணம் வைப்பிலிடச் சென்ற வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ரூபா 2 கோடி 23 இலட்சம் பணத்தை ஆயுத முனையில் கொள்ளையிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட இருவர், மடக்கிப்பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கெளரவிக்கப்பட்டுள்ளார்.

புத்திக குமாரவை கௌரவிக்கும் வகையில், பொலிஸ் மாஅதிபரினால் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு பதவியுயர்த்தும் கடிதம் மற்றும் ரூ. 25 இலட்சம் பணப்பரிசு, பொலிஸ் வீரப் பதக்கம் ஆகியவற்றை வழங்கி வைக்கும் வைபவம் இன்று (03) இடம்பெற்றிருந்தது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி, பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில், வட மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் பதவியுயர்வு பெற்ற புத்திக குமாரவின் தாய், மனைவி, குழந்தைகள், தம்புத்தேகம பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *