மெக்சிகோவில் மர்ம நபர்கள் நேற்று நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் முதல்வர் மற்றும் அவரது தந்தை உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் மெக்சிகோ ராணுவத்தினரும், காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் முடக்கிவிடப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என முதல்கட்ட விசாரணையில் ராணுவத்தினருக்கு தெரியவந்துள்ளது.
ராணுத்தினருக்கு அதிக அதிகாரங்கள்
மெக்சிகோவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த, அந்நாட்டு அதிபர் ஆன்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் அண்மைக்காலமாக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு ராணுத்தினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் அதிக அளவிலான அதிகாரங்களை அவர் வழங்கினார்.
இதனால் தற்போது மெக்சிகோவின் அனைத்து நகரங்கள் மற்றும் ஊர்களில் காவல்துறையினரின் அதிகாரங்கள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அதிகப்படியான அதிகாரத்தால் ராணுவத்தினர் இரவு பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர்.
இது, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
பதிலடியாக துப்பாக்கிச் சூடு
ராணுவத்தினருக்கு அதிக அதிகாரம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது போதைப்பொருள் கடத்தல் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை மெக்சிகோவின் குரீரோ மாகாணத்தில் உள்ள சான் மிக்யூல் டோடோலாபன் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்நகர முதல்வர் கான்ராடோ மென்டோஸா வந்திருந்தார்.
அவருடன் அவரது தந்தையும் உடனிருந்தார். அவரும் அந்நகரின் முன்னாள் முதல்வர் ஆவார்.
இந்நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் அந்தப் பகுதிக்கு கார்கள் மற்றும் உந்துருளிகளில் வந்த மர்ம நபர்கள், திடீரென அங்கிருந்தவர்களை இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.
இதனால் அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சுமார் 2 நிமிடங்கள் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இதில் முதல்வர் கான்ராடோ மென்டாஸா, அவரது தந்தை உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படை
துப்பாக்கிச் சூட்டில் முதல்வரும், பொதுமக்களும் உயிரிழந்தது மெக்சிகோவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொலையாளிகளை தேடும் பணியில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.