90 நாள் தடுப்புக் காவல் உத்தரவு ரத்து
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) உறுப்பினர் ஹஷான் ஜீவந்த விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹஷான் ஜீவந்த விடுதலை செய்யப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
ஜீவந்தவுக்கு எதிரான விசாரணைகளை காவல்துறையினர் முடித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக வழங்கப்பட்ட 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவு ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு
ஓகஸ்ட் 18 அன்று, பொருளாதார நெருக்கடி மற்றும் அரச அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையிலான அணிவகுப்பின் போது கிட்டத்தட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
பெரும்பாலான போராட்டக்காரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர், ஆனால் வசந்த முதலிகே, ஹஷன் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தொடர்ந்து தடுத்து வைக்க அரசாங்கம் ஓகஸ்ட் 22 ஆம் திகதி அன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) பிரயோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.