இலங்கையை தற்போதைய பொருளாதர நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் எனவும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரசாரம் இன்றி எதனையும் சாதிக்க முடியாது என சுட்டிக்காட்டிய அதிபர், நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாமதமின்றி மக்களுக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும், அனைத்து ஊடக செயலாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் அரச தொடர்பாடல் பொறிமுறை தொடர்பில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் ஆகியோரின் ஊடக செயலாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் கொள்கைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது அமைச்சின் ஊடகச் செயலாளர்களுக்கு இருக்கும் பிரதான பொறுப்பாகும்.
கடினமான காலத்தில் பயணம்
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் தவறான எண்ணங்கள் இருப்பின் திருத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது கடினமான காலத்திலே நாடு பயணித்துக் கொண்டிருப்பதால் நாடு வீழ்ச்சி பாதையில் பயணித்துக் கொண்டிருக்குமாயின் அதிலிருந்து மீட்சிபெறுவது கடினம்.
நாடு உறுதித்தன்மையுடன் பயணிக்க வேண்டும் என்றும் சரியான தகவல்களை வழங்குவதன் ஊடாகவே ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும்.
அதிகளவு பிரச்சினையை ஏற்படுத்தும் சமூக ஊடகங்கள்
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களை விட அதிளவிலான பிரச்சினை சமூக ஊடகங்களாலேயே ஏற்படுகின்றது. அதேவேளை ஊடகங்கள் உரிய வகையில் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.
பொறுப்புக்களை உரிய வகையில் நிறைவேற்றாவிடின் முழு நாடும் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். அடுத்த வாரம் முதல் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆலோசனைக்கமைய மக்கள் சபையை ஸ்தாபிக்கப்படவுள்ளது” எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.