செய்திகள்

3 மாதங்களுக்கு முன் திருமணமான, முஹம்மது பஸ்ரின் வாகன விபத்தில் வபாத்புத்தளம் – முந்தல் கீரியங்களி பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மதுரங்குளி நல்லாந்தளுவ பகுதியைச் சேர்ந்த பரீத் முஹம்மது பஸ்ரின் ( வயது 25) எனும் இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிதாக திருமணமான குறித்த இளைஞரும், அவரது மனைவியும் கடந்த 20 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் கொழும்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று மீண்டும் தமது வீட்டுக்கு வருகை தந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்ததுடன், முச்சக்கர வண்டியில் பின்பக்கம் இருந்த அவரது மனைவியும், மனைவியின் சகோதரரும் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு தொடர்ந்தும் மூன்று வாரங்கள் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நேற்று செவ்வாய்க்கிழமை (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *