சிவன் வேடமிட்டு நடித்தவர்
உத்தர பிரதேச மாநிலத்தில் சிவன் வேடமிட்டு நடித்த நபர் ஒருவர், மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், ஜான்பூரில் புகழ்பெற்ற ராம் லீலா நாடகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில், உள்ளூரை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சிவன் வேடமிட்டு நடித்திருக்கிறார்.
ஜான்பூரில் உள்ள பெலாசின் கிராமத்தில் நடைபெற்ற இந்த ராம் லீலா நாடகத்தில் உணர்ச்சிபூர்வமாக நடித்துக்கொண்டிருந்த ராம் பிரசாத் திடீரென மயங்கி கீழே விழுந்திருக்கிறார். நாடகத்தில் சிவனுக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்வின் போது, ராம் பிரசாத் கீழே விழவே, அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் மற்றும் சக நடிகர்கள் உடனடியாக அவரை எழுப்பியிருக்கின்றனர்.
ஏற்கனவே மரணம்
ஆனால், அவரிடம் எவ்வித சலனமும் இல்லாததால் பதறிப்போன மக்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்திருக்கின்றனர். ஆனால், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் கூறவே, அங்கு கூடியிருந்த மக்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.