மாணவர்கள் பாடசாலை செல்லும் போர்வையில் மசாஜ் நிலையங்களுக்கு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலைகளின் அதிபர்கள், ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல பாடசாலை மாணவர்கள், பாடசாலைக்கு செல்கின்றோம் என்ற போர்வையில், வீடுகளில் பணத்தை திருடிக்கொண்டு, இப்படியான இடங்களுக்கு செல்லும் அடிமை நிலைமைக்கு உள்ளாகி இருப்பதாக பாடசாலை அதிபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், பாடசாலை மாணவர்கள், பாடசாலை நேரங்களில் மசாஜ் நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ள மட்டுமின்றி சேவைகளை வழங்கி வருவது தொடர்பான பல முறைப்பாடுகள் கடந்த மூன்று மாதங்களில் தமக்கு கிடைத்துள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் செயற்பாடு
அதேவேளை, பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வரும் தாய்மார் மற்றும் தந்தைமாரும் மசாஜ் நிலையங்களை நோக்கி செல்வது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குடும்பங்களில் விரிசல் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் நடந்து வரும் இப்படியான மோசமான வர்த்தகங்களை நடத்த அனுமதிப்பத்திரங்களை வழங்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இவ்வாறான வர்த்தகங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வருவதாகவும் ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அதிகளவான மசாஜ் நிலையங்கள், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் மகரகமை ஆகிய பிரதேசங்களியே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாடசாலைகளுக்கு செல்லும் தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.