செய்திகள்

“எமக்கு நடத்திருக்கின்ற இந்த, அநியாயத்துக்கு நீங்கள் நியாயம் தாருங்கள்”



 கல்வியில் கூட தென்னாசியாவில் உயர்ந்த நிலையில் இருந்த எமது நாட்டை ஆட்சியாளர்கள் துர்ப்பாக்கிய நிலைக்கும், கையேந்துகின்ற நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள் என முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாளை என்ன நடக்கும், அடுத்த மாதம் என்ன நடக்கும், ஜனவரி என்ன நடக்கும் என ஒவ்வொரு பொருளாதார நிபுணர்களும் ஒவ்வொரு வகையான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

உலக நாடுகளில் எமது நாடு இன்று கறுப்பு மை பூசப்பட்டது போல் ஒரு வித்தியாசமான தாழ்ந்த பார்வையோடு பார்க்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அனைத்து வளங்களையும் கொண்டிருக்கும் நாடே எமது நாடு. கல்வியில் கூட தென்னாசியாவில் உயர்ந்த நிலையில் இருந்த எமது நாட்டை ஆட்சியாளர்கள் துர்ப்பாக்கிய நிலைக்கும், கையேந்துகின்ற நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.

எல்லோரும் இன்று கடனாளிகளாக, ஒரு நேரச் சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்களாக வாழுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் பரிதாபகரமான நிலையில் இருக்கின்றனர் என்று செய்திகள் மூலம் அறியமுடிகின்றது.

இவ்வாறான நிலையில் புதிய ஜனாதிபதி உணவு உற்பத்திக்காக எல்லோரும் தயாராகுங்கள் என அடிக்கடி பேசி வருவதை நாங்கள் காண்கின்றோம்.

திருகோணமலையில் பேசுகின்ற போது கூட அவ்வாறு பேசியுள்ளார். அம்பாறையிலும் பேசியுள்ளார். எமது மக்களைப் பொறுத்தவரை விவசாயம் செய்ய ஆசைப்படுகின்றார்கள்.

விவசாயம் செய்ய வளம் இருக்கின்றது. மண் வளம் இருக்கின்றது. இலங்கையில் 40 வீத உழுந்து உற்பத்தியை வவுனியா மாவட்டம் ஒரு காலத்தில் வழங்கியது. இன்று உழுந்து தேவையை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது.

வனவளத் திணைக்களத்தால் போடப்படுகின்ற தடை அதனைப் பாதித்துள்ளது. மூதாதையர் செய்த நிலங்கள், யுத்தத்தால் சில காலம் கைவிடப்பட்டிருந்த நிலங்கள் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத வகையில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டீசல் பிரச்சினை, யூரியா பிரச்சினை, வனவளத் திணைக்களத்தின் பிரச்சினை எனப் பல பிரச்சினைகள் இருகின்றன. வனவளத் திணைக்களத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க கடந்த காலங்களில் பல முயற்சிகளைச் செய்தோம். சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும், பல பிரச்சினைகள் தீர்க்கப்படாது தேங்கிக் கிடக்கின்றன.

தேக்கு மரத்தைக் குளத்துக்குள் நடுகின்றார்கள்.அவ்வாறான பிழையான நடைமுறைகளுக்கு எங்களது அரச அதிகாரிகளும் ஒத்துப் போகின்றார்கள்.

அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மக்களுடன் சேர்ந்து நின்றால் மட்டும் தான் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். தென்னிலங்கையில் இவ்வாறான பிரச்சினைகள் கிடையாது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில்தான் இவ்வாறான பெரிய அநியாயம் போருக்குப் பின்னர் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாக இருந்தால் தற்போது வந்துள்ள ஜனாதிபதியோடு நாங்கள் எல்லோரும் இணைந்து பேச முடியும்.

நாட்டில் பஞ்சத்தைப் போக்க விவசாயம் செய்யுமாறு சொல்லுகின்ற போது, எமக்கு நடத்திருக்கின்ற இந்த அநியாயத்துக்கு நீங்கள்தான் நியாயம் தாருங்கள்.அதன் மூலம்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தைத் தீர்க்க எமது மக்களும் பங்களிப்புச் செய்ய முடியும் எனச் சொல்வோம். இதன் மூலம் எமது மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியும்” – என்றார்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *