மிரிஹான காவல் நிலையத்தில் இருந்த மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் விநியோகம் செய்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரை மிரிஹான காவல்துறை அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரருக்கு காவல் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளை வழங்கியதாக கூறப்படும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விநியோகம்
மிரிஹான காவல் நிலையத்திலுள்ள மோட்டார் சைக்கிள் மூலம் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 14 ஆம் திகதி மிரிஹான காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணைகளில் ஆதாரபூர்வமாக போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் இருந்து போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்து விதி மீறலுக்காக பிடிபட்ட மோ.சைக்கிள்
போதைப்பொருள் கடத்தல்காரரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த மோட்டார் சைக்கிள் 6 நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து விதிமீறலுக்காக மிரிஹான காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டமை தெரியவந்துள்ளது. அப்போது மிரிஹான காவல்துறையினரின் பிடியில் இருந்த மோட்டார் சைக்கிள் விடுவிக்கப்படாததையடுத்து, குறித்த மோட்டார் சைக்கிளை கடந்த 09 ஆம் திகதி லொறியில் ஏற்றி காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருடன் இணைந்து திருடியுள்ளது தெரியவந்துள்ளது.
குறித்த காவல்துறை உத்தியோகத்தருக்கு 10,000 ரூபா லஞ்சம் கொடுத்து மிரிஹான காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.