இந்த வருடத்தில் நத்தார் பண்டிகையை எளிமையாக கொண்டாடுமாறும், அலங்காரங்களுக்காக ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்க்குமாறும் கத்தோலிக்கர்களுக்கு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று -17- அழைப்பு விடுத்துள்ளார்.
நீர்கொழும்பு, படபத்தல புனித தெரேசா தேவாலயத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமய ஆராதனையின் போது உரையாற்றிய கர்தினால் ரஞ்சித், இவ்வருட கிறிஸ்துமஸ் பண்டிகை பசித்திருப்பவர்களுக்கு உணவளிப்பதாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
“நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த கிறிஸ்துமஸில் தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களை அலங்கரிப்பதற்காக பணத்தை வீணாக்கக்கூடாது. பசியில் வாடுபவர்கள் ஏராளம். எனவே, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது மட்டுமே செய்ய வேண்டும்,” என்றார்.
ஈஸ்டர் ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.
“தற்போதைய ஜனாதிபதி, பின் வாசலில் இருந்து வந்தவர் என்பதால், அவர் பதவியை வகிக்க மக்களின் ஆதரவு இல்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு, தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என தெரிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாந்து யார்டை அழைத்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, அரசியல் பேசுவதாகவும் என்னை விமர்சிக்கின்றனர். சமூக அநீதிகள் இருக்கும் இடத்தில் திருச்சபை அமைதியாக இருக்க முடியாது என்று அண்மையில் பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்த கருத்துக்கு இணங்க நான் அவ்வாறு செய்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.