செய்திகள்

இந்த வாரம் முக்கியத்துவமிக்க பாராளுமன்ற அமர்வுகள்



2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) இன்று (18) பாராளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வாரத்துக்கான பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக அண்மையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

பாராளுமன்றம் இன்று முதல் 21 ஆம் திகதி வரை கூடவிருப்பதுடன், ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. அத்துடன் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

ஒக்டோபர் 19 ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நீதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட 06 சட்டமூலங்களை விவாதத்துக்கு எடுக்கவும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்தது.

இதற்கமைய நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம், நொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம், அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம், விருப்பாவணங்கள் (திருத்தச்) சட்டமூலம், மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பன இரண்டாவது மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரம் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் 21ஆம் திகதி பி.ப 5.30 மணி வரை நடைபெறும் அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் முடிவுக்கு வந்ததும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *