சிறிலங்கா கடற்பரப்பிற்குள் சீனக் கப்பல் ஒன்று பிரவேசிக்கவுள்ளதாக சிறிலங்காவின் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
அந்த வகையில், சீனக் கப்பல் நாளை அல்லது நாளை மறுதினம் சிறிலங்கா கடற்பரப்பிற்குள் வரவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிறிலங்கா கடற்பரப்பில் தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடிபாடுகளை மீட்பதற்காகவே இந்தக் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தீப்பற்றிய கப்பல்
அதற்கமைய தீப்பிடித்த கப்பலின் இடிபாடுகள் அகற்றப்படும் வரை இந்தக் கப்பல் சிறிலங்கா பெருங்கடலில் பல மாதங்கள் தரித்து நிற்கும் என்றும் அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கப்பல் தீப்பற்றி எரிந்த போது சிதறிய 1700 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு நீர்கொழும்பு, பமுனுகமவிற்கு அருகில் உள்ள கழிவு சேமிப்பு முற்றத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆய்வகங்களில் கழிவுகள் பிரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அதனை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தர்ஷனி லஹந்தபுர மேலும் தெரிவித்தார்.
யுவான் வாங் 5 ஆல் ஏற்பட்ட சிக்கல்
இதேவேளை கடந்த ஜூலை 14 ஆம் திகதி சீனாவிலிருந்து புறப்பட்ட, ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5, ஜூலை 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்பும் நோக்கத்தில் உத்தியோகபூர்வமாக நுழைந்தது.
யுவான் வாங் 5 கப்பல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது. அத்துடன் பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிக்கும் திறன் படைத்தது.
இதனையடுத்து சீன கப்பல், இந்தியாவின் பாதுகாப்பு இரகசியங்களை சேகரித்து செல்வது, இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அவ்வாறான நிலையில், இந்தியாவின் தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு என்றுமில்லாவாறு அதிகரிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.