Uncategorized

வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் அங்குரார்ப்பணம்


யாழ். பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. 


யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சந்திப்பினை தொடர்ந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களை இணைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் அங்குரார்ப்பணம் இன்று நடைபெற்றுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களில் உள்ள வளாகங்களையும் இணைத்து இந்த அமைப்பினை வலுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நிர்வாகத் தெரிவு

வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் அங்குரார்ப்பணம் | North Eastern University Tamil Students Union


இன்றைய கூட்டத்தின் அடிப்படையில் வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தின் தலைவர் நி.தர்சன் தெரிவுசெய்யப்பட்டதுடன், செயலாளராக யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அ.விஜயகுமாரும் பொருளாளராக யாழ். பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பிரதீபனும், ஊடகப் பேச்சாளராக யாழ். பல்கலைக்கத்தினைச் சேர்ந்த இராசரத்தினம் தர்சனும் செயற்பாட்டு உறுப்பினராக கிழக்கு பல்கலைக்கழக மாணவி அனுஸ்திகவும், ஒருங்கிணைப்பாளராக யாழ். பல்கலையின் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சினும் தெரிவு செய்யப்பட்டனர்.


இந்த கட்டமைப்பானது வடகிழக்கின் அனைத்து பல்கலைக்கழகத்தினையும்  உள்ளடக்கியதாக எதிர்காலத்தில் உருவாகவுள்ளதாக வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நி.தர்சன் தெரிவித்தார்.


கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வினைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


வடகிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து பலம்வாயந்த  ஒரு அமைப்பாக இதனை உருவாக்கவுள்ளதாகவும், இது காலத்தின் கட்டாயம் கருதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு தமிழ் மக்களின் பலம்

வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் அங்குரார்ப்பணம் | North Eastern University Tamil Students Union


இந்த நாட்டில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் சூழ்நிலையிலேயே இந்த மாணவர் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல்கொடுக்கும் வகையிலும் மாணவர்கள் நலன்சார்ந்த வகையிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்கப்போவதாகவும் தலைவர் இந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.


வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் வகையிலும் இந்த அமைப்பு செயற்படவுள்ளதாக வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.விஜயகுமார் தெரிவித்தார்.

வடகிழக்கு தமிழ் மக்களின் பலமாக இணைந்து செயற்படுவத்றகு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


வடகிழக்கு என்ற இணைந்த பதத்தினை தமிழ் பல்கலைக்கழக மாணவர்களாக நாங்கள் உச்சரிப்பதில் பெருமகிழ்ச்சியடைவதாக வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் இராசரத்தினம் தர்ஷன் தெரிவித்தார்.



யாழ். பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து இந்தக் கட்டமைப்பினை உருவாக்கியுள்ள போதிலும் முக்கிய பொறுப்புகளில் ஏனைய வடகிழக்கில் உள்ள வளாகங்களில் உள்ள மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


வடகிழக்கில் இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலாக இருக்கலாம், தமிழ் அரசியல் கைதிகளில் விடுவிப்பதாகவிருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையாகவிருக்கலாம், ஜெனிவாவில் எங்களை ஏமாற்றும் விடயங்களாகயிருக்கலாம் அனைத்து விடயங்களுக்கு எதிராகவும் இனிமேல் வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் பலமாக இருக்கும்.

வடகிழக்கில் பொதுக்கட்டமைப்பு

வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் அங்குரார்ப்பணம் | North Eastern University Tamil Students Union



வடகிழக்கில் இன்று நடைபெறும் நினைவேந்தல்களில் நாங்கள் அரசியலை காண்கின்றோம். கடந்த காலத்தில் கொரோனா போன்ற அச்சுறுத்தல்கள் காரணமாக மாணவர் ஒன்றியங்களினால் தமது செயற்பாடுகளை சிறப்பாக செயற்படமுடியாத நிலையிருந்தது. எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது என நம்புகின்றோம்.



முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டிக்க யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கியிருந்தது. அண்மையில் தியாக தீபம் தீலீபன் அவர்களின் நினைவு தினத்தில் கூட நடைபெற்ற சம்பவங்களை அனைவரும் அறிவீர்கள். எதிர்காலத்தில் இவ்வாறான இடங்களில் வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் செயற்படும். வடகிழக்கில் ஒரு பொதுக்கட்டமைப்பினை உருவாக்கி செயற்படுவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்.


முல்லைத்தீவின் ஊடாக திருகோணமலையினை அடையும் பாதையில் நாங்கள் வரும்போது அப்பகுதியில் மிகவும் வேதனையான விடயங்களாகயிருந்தது.



நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறான விடயங்களுக்கு எதிராக வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் தமது குரலை வெளிப்படுத்தும் என ஊடகப் பேச்சாளர் தர்ஷன் தெரிவித்தார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *