இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஆதரவளிக்குமாறு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிடம் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வருட இறுதியில் கூட்டமொன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் நம்பிக்கையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா அரசாங்கமும் இதில் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடன் வருட இறுதியில் கூட்டமொன்றை நடத்த ஜப்பான் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கால அவகாசம்
இந்த கூட்டத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் ஏனைய கடன் வழங்கும் நாடுகளும் பங்குவகிக்குமாறு ஜப்பான் கோரிக்கை விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.
மேலும் செலுத்த வேண்டிய கடன் தொகையை குறைப்பது, அதற்கான கால அவகாசம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு
கடந்த செப்டெம்பர் மாதம் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு விஜயம் செய்தார்.
அதன்போதே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.