திலினி பிரியமாலி பெற்றதாக கூறப்படும் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கத்தில் ஒரு பகுதி சந்தேகநபர் இசுரு பண்டார வசம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகர்களிடம் பல கோடி ரூபா மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் கணவன் என கூறப்படும் இசுரு பண்டாரவை இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று(18) உத்தரவிட்டுள்ளது.
நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட திலினி பிரியமாலியின் பிரிந்த கணவர் என கூறப்படும் இசுரு பண்டார நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
உலக வர்த்தக மையத்தில் 34 மாடியில் அமைந்துள்ள திகோ குழுமத்தின் அலுவலகத்தில் வைத்து வர்த்தகர் ஒருவரிடமிருந்து தங்கம், அமெரிக்க டொலர்கள் மற்றும் அவுஸ்திரேலிய டொலர்களை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பிலான வாக்குமூலங்களைப் பெற்ற பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திலினி பிரியமாலி தனது கணவரான இசுரு பண்டாரவுடன் முகநூல் ஊடாக 2019ம் ஆண்டு உறவை வளர்த்துக்கொண்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், சந்தேகநபரான திலினி பிரியமாலி திகோ குழுமத்தின் பணிப்பாளர் எனவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் சந்தேகநபர் 8 தடவைகள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்படி, சந்தேகநபர் இசுரு பண்டாரவிடம் 8 கோடி ரூபாவை பல சந்தர்ப்பங்களில் வழங்கியதாகவும் பின்னர் அதனை டொலராக மாற்றியதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
திலினி பிரியமாலி பல்வேறு நபர்களிடம் பணம் பெற்ற இடங்களிலும் சந்தேகநபர் இருந்ததாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
திலினி பிரியமாலியின் மோசடி வலையமைப்பில் இசுரு பண்டார முக்கிய நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட தகவல்களை பரிசீலித்த கோட்டை நீதவான் சந்தேக நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி திலினி பிரியமாலியும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். Tamilwin