செய்திகள்

ஜெனீவா மனித உரிமை பேரவை மீது, அலிசப்ரி குற்றச்சாட்டுஜெனீவா மனித உரிமை பேரவை வெவ்வேறு சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயல்படுகின்றதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் நேற்று -19- தெரிவித்தார். ஜனநாயக அபிலாசைகளுக்கு இணங்கவே இலங்கை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் எவ்வாறாயினும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கிணங்கவே மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

ஜெனீவா மனித உரிமை பேரவை தொடர்பில் வெளிவகார அமைச்சின் சார்பில் கூற்றுக்களை சபையில் முன்வைத்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:  

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில் ஜனநாயக ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மனித உரிமை பாதுகாப்பது தொடர்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தேசிய பேரவையின் மூலம் அவற்றிற்கான தீர்வுகளை காண்பதற்கு நாம் எதிர்பார்த்து ள்ளோம்.

இத்தகைய நடவடிக்கைகள் இலங்கை மீதான வெளிநாட்டு தலையீடுகளை தவிர்க்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமையும்.

இணை அனுசரணை நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அந்த தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்காலத்திலும் வெளிநாட்டு தலையீடுகளை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை உள்ளூர் பிரச்சினைகளுக்கு உள்ளூரிலேயே தீர்வு காணப்பட வேண்டும்.

ஜெனீவா மனித உரிமை ஆணையாளருக்கும் நாம் அது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளோம். உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலம் அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். அது தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் நாம் விரிவான பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளோம். அதன் போது விடயங்களை நாம் அவர்களுக்கு விளக்கியுள்ளோம். அவர்களது ஆதரவு எமக்கு கிடைக்கும்.

சர்வதேச உறுப்பு நாடுகள் எமது உள்ளக பொறிமுறை தொடர்பில் ஆதரவு தெரிவித்துள்ளன. ஜெனிவா மனித உரிமை பேரவையிலும் அது எதிரொலித்தது.

ஜனநாயக அபிலாசைகளுக்கு ஏற்ப அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எவ்வாறாயினும் நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புக்கு இணங்கவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இலங்கையானது பல சவால்களை வெற்றி கொண்டுள்ளது. அதில் பயங்கரவாத ஒழிப்பு, கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட முடியும்.

அத்துடன் பொருளாதார ரீதியான செயல்பாடுகள் மற்றும் சமூக ரீதியான செயல்பாடுகள் அனைத்தையும் அரசாங்கம் நீதியான முறையில் முன்னெடுத்து வருகின்றது. நாட்டுக்காக நாம் ஒன்றிணைந்து இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும்.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் நாம் அளித்த வாக்குறுதிக்கிணங்க செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாக்களித்தபடி அதனை நாம் நிறைவேற்ற வேண்டும். முழு உலகமும் அதனை மிகவும் அவதானத்துடன் நோக்குகிறது. அத்துடன் வெளிநாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளும் அது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றன.

எவ்வாறாயினும் இணை அனுசரணை நாடுகளால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் போதிய ஆதரவை பெறவில்லை. சில நாடுகள் அதற்கு வாக்களிக்க விரும்பவில்லை. அதேவேளை இலங்கைக்கு ஆதரவாக சில நாடுகள் வாக்களித்தன. எதிராகவும் சில நாடுகள் வாக்களித்துள்ளன. எமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் ஜெனிவா மனித உரிமை பேரவையிலும் எமக்கு ஆதரவாகவே உரையாற்றினர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *