பொதுவாக ஒரு கோழியின் முட்டை நிறை 50 முதல் 70 கிராம் வரை இருக்கும் நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் என்ற பகுதியில் 210 கிராம் நிறையுள்ள முட்டையை கோழி ஒன்று இட்டுள்ளதை அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய முட்டையாக இந்த முட்டை கருதப்படுகிறது.
கோலாப்பூர் மாவட்டத்திலுள்ள தல்சண்டே என்ற கிராமத்தில் கோழிப்பண்ணையை வைத்துள்ள திலீப் சவான் என்பவர் வளர்க்கும் கோழிகளில் ஒன்று தான் இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3 முதல் 4 மஞ்சள் கருக்கள்
இந்த முட்டையில் 3 முதல் 4 மஞ்சள் கருக்கள் இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கோழிப்பண்ணையின் உரிமையாளர் திலீப், முதலில் இந்த ராட்சச முட்டையை பார்த்து ஆச்சரியமடைந்து அதன்பின் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தான் கோழி பண்ணை வைத்துள்ளதாகவும், தன் வாழ்நாளில் இவ்வளவு பெரிய முட்டையை கண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதன் பின் அவர் அந்த முட்டையின் நிறையை சோதனை செய்தபோது 210 கிராம் இருந்தது என்றும் அவர் உறுதி செய்துள்ளார்.
மிகப்பெரிய ஆச்சரியம்
இந்த ராட்சச முட்டையை பார்த்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.கடந்த 40 ஆண்டுகளாக கோழி முட்டை வியாபாரம் செய்து வரும் எனக்கு இது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சாதனை புத்தகத்தில்
தற்போது லிம்கா புக் ஒப் ரிக்கார்டில் இந்த முட்டை பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த முட்டையின் நீளம் 10 சென்டிமீட்டர் என்றும், 5 சென்டிமீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் உலகிலேயே மிகப்பெரிய முட்டையை அமெரிக்காவில் உள்ள கோழி ஒன்று இட்டுள்ளது என்றும் அந்த முட்டையின் மொத்த எடை 454 கிராம் என்றும் கூறப்படுகிறது.