நியூசிலாந்தில் பசுக்கள் மற்றும் ஆடுகள் விடும் ஏப்பத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
அதாவது, நியூசிலாந்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன், 2050 ஆம் ஆண்டுக்குள், நாட்டில் கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக ஆகிவிடும் என்று உறுதியளித்துள்ளார்.
அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 2030 ஆம் ஆண்டுக்குள் பண்ணை விலங்குகள் காரணமாக வெளியாகும் மீத்தேன் உமிழ்வை 10 சதவிகிதம் குறைக்கவும், 2050 க்குள் 47 சதவிகிதம் வரை குறைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இந்நிலையில், மாடுகள், ஆடுகள் போன்ற பண்ணை விலங்குகள் விடும் ஏப்பத்திற்கு, வரி விதிக்கும் திட்டம் ஒன்ரை முன் வைத்துள்ளார்.
நியூசிலாந்தில் மக்கள் தொகையை விட பண்ணை விவசாயத்திற்காக வளர்க்கப்படும் கால்நடை எண்ணிக்கைகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் போராட்டம்
இதனை எதிர்த்து, வியாழன் அன்று நியூசிலாந்து முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் வீதிக்கு வந்து மாடுகளின் ஏப்பம் மற்றும் பிற பசுமை இல்ல வாயு எனப்படும் சுற்று சூழலை பாதிக்கும் வாயு உமிழ்வுகள் மீது வரி விதிக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நியூசிலாந்து நாடு முழுவதும் உள்ள நகரங்களில் 50 க்கும் மேற்பட்ட போராட்டங்களை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம், காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பண்ணை வரியை அரசாங்கம் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை இது வரை உலகில் எந்த நாடுகளும் எடுக்காத நடவடிக்கையாக இருக்கும் என்றும், காலநிலைக்கு உகந்த பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயிப்பதன் மூலம் விவசாயிகள் செலவை ஈடுசெய்ய முடியும் என்றும் அரசாங்கம் கூறியது.
சுற்று சூழலை பாதிக்கும் வாயுக்கள்
நியூசிலாந்தில் பண்ணை விவசாயம் மிகவும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது. 10 மில்லியன் மாட்டிறைச்சிகான மாடுகள் மற்றும் பால் வழங்கும் மாடுகள் உள்ளன. 26 மில்லியன் செம்மறி ஆடுகள் உள்ளன.
வெறும் 5 மில்லியன் மக்களுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையில் பண்ணை விலங்குகள் தான் உள்ளன.
எனவே, மனிதர்களை விட கால்நடைகள் காரணமாகத் தான் சுற்று சூழலை பாதிக்கும் வாயுக்கள் வெளியிடப்படுகின்றன.
கால்நடைகளை ஏப்பம் விடுவதன் மூலம் வெளியிடப்படும் மீதேன் அளவு அதிகமாக உள்ளது.
ஆனால் சில விவசாயிகள் உத்தேச வரி உண்மையில் உணவு தயாரிப்பதில் குறைந்த திறன் கொண்ட நாடுகளுக்கு விவசாயத்தை மாற்றுவதன் மூலம் உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கும் என்று வாதிடுகின்றனர்.