இலங்கை வாழ் மக்களின் வாக்குகளின்றி அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு நிறைவேற்று அதிபர் முறைமையின் கீழ் இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் மக்கள் மீதான அதிகாரங்கள் சிறிலங்கா அதிபருக்கு வழங்கப்பட வேண்டுமானால் அவர் மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட வேண்டுமென இன்று நாடாளுமன்றத்தில் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கள் மாற்றம்
மேலும் உரையாற்றிய அவர், இலங்கையை கடந்த காலங்களில் ஆட்சி செய்த ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் நாட்டுக்கு சேவை செய்தவர்கள் அல்ல.
இலங்கையில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்புக்கள் மாறினாலும் ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகள் மாறவில்லை.
அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் படி நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களுக்கு பின்னர் மாத்திரமே கலைக்க முடியும்.
அதனடிப்படையில் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க கூடிய அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு வழங்கப்படும்.
நாடாளுமன்ற கலைப்பு
அரசியலமைப்பை மாற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இந்த அதிகாரம் மாற்றப்படவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் இரண்டரை வருடங்களின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை நான்கரை வருடங்களாக மாற்றுமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
மக்களின் தேவைகள் குறித்து ஆராயாமல் தமது பதவிக்காலத்தை நீடிப்பதற்காகவும் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் அரசியல்வாதிகள் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்” என்றார்.