Uncategorized

அதிகாரிகளுக்கு ரணில் பிறப்பித்த பணிப்புரை – ஐபிசி தமிழ்


சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அதிபர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அதிபர் இந்தப் பணிப்புரைகளை வழங்கினார்.

சுற்றுலா விஸ்தரிப்பு 

அதிகாரிகளுக்கு ரணில் பிறப்பித்த பணிப்புரை | Sri Lanka Promoting Tourism Ranil Instructed


2023ஆம் ஆண்டுக்குள் எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை விஸ்தரிப்பதன் மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க முடியும் எனவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.


சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கான நிதிப் பரிமாற்றல், இலங்கை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை அகற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.


வெளிநாட்டு விமானங்களை தரையிறக்குவதற்கு அதிக கட்டணம் அறவிடப்படுவதால் சுற்றுலாத்துறையினருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.



இது குறித்து ஆராய்ந்து பிரச்சினையைத் தீர்க்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு அதிபர் பணிப்புரை விடுத்தார்.


2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் முழுப் பயணத்தையும் உள்ளடக்கும் வகையில் கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) ஒன்றை சுற்றுலா அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இங்கு குறிப்பிட்டார்.

சுற்றுலா வலயங்களை நியமிக்க நடவடிக்கை

அதிகாரிகளுக்கு ரணில் பிறப்பித்த பணிப்புரை | Sri Lanka Promoting Tourism Ranil Instructed


பல சுற்றுலா ஹோட்டல்கள் இரவு 10.00 மணிக்குள் மூடப்படுவது சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதனால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுற்றுலா வலயங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர், அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்தார்.



இலங்கையில் இந்தியத் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் சுற்றுலாத்துறைக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.


பிரபல சைக்கிள் ஓட்ட வீரர்களின் பங்கேற்புடன் பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரையிலான சைக்கிள் சவாரியை ஏற்பாடு செய்தல், Visit Sri Lanka வேலைத்திட்டம் உட்பட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல திட்டங்கள் குறித்தும் அதிபருக்கு விளக்கமளிக்கப்பட்டது.  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *