பிரித்தானியாவில் ஆறு ஆண்டுகளில் அதன் ஐந்தாவது பிரதமர் எதிர்வரும் வெள்ளியன்று பதவியேற்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக வேட்பாளர் போட்டி தீவிரம் அடைந்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசியல் முறைகேடுகளை மையப்படுத்தி தனது சகாக்களால் பதவி விலக வைக்கப்பட்ட பொறிஸ் ஜோன்சன் மூன்றே மூன்று மாதங்களுக்குப் பின்னர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் நுழைந்துள்ளார்.
ஜோன்சன் அவசர நுழைவு
பிரதமர் லிஸ் ட்ரஸின் பதவி விலகலை அடுத்து கட்சித்தலைமை மற்றும் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்வரும் திங்கட்கிழைம பிற்பகலுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கட்சித்தலைமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அதிகார போட்டிக் களத்தில் மீண்டும் பிரவேசிப்பதற்காக தனது கரீபியன் விடுமுறையை அவசரமாக முடித்துக்கொண்டு இன்று பொறிஸ் ஜோன்சன் லண்டன் திரும்பியுள்ளார்.
ஆதரவு குவிப்பு
போட்டிக்குள் நுழைவதற்கு தேவையான 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பங்களை திரட்டும் ஆட்டத்தில் ரிஷி சுனக்குக்கு ஏற்கனவே 100 ஒப்பங்கள் கிட்டியுள்ளதாக தெரிகிறது.
ஆனால் ஜோன்சனுக்கு இதுவரை 44 ஒப்பங்கள் மட்டுமே கிட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
ரிஷிசுனக் மற்றும் பொறிஸ் ஜோன்சன் ஆகிய இருவரும் தமது பிரசாரங்களை அதிகாரபூர்வமாக தொடங்க காத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.