22 ஆவது திருத்தத்தை ஆதரித்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள 21 ஆவது திருத்தமே நாட்டுக்கு சிறந்தது எனவும், அப்படியொரு நல்ல விடயம் இருந்தும் 22 ஆவது திருத்தத்தை கோட்டாபயவின் சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்காகவே ஆதரித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் திவுலபிட்டிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று(22) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அவர்,
தான்தோன்றித்தனமான செயற்பாடு
“நல்லாட்சிக்காகவே 22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்தோமேயன்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி ரோஹினி மாரசிங்கவையோ அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவாவையோ வீட்டுக்கு அனுப்புவதற்காக அல்ல.
இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அவ்வாறு செயற்பட முற்பட்டால் எந்நேரத்திலும் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்குவோம்.
இவ்வாறு அரச அதிகாரத்தை தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம்.
எப்போதும் மக்களுக்காகவே முன்நின்ற தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோரின் சுயாதீனத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்நிற்கும்.
அந்தத் தலைவர்களின் கடமைகளில் தலையிடாமல் முடிந்தால் தேர்தலை உடன் நடத்துங்கள்.
ராஜபக்சர்களின் மீள் பிரவேசம்
ராஜபக்சர்களின் அடிமையாக வாழ்ந்த வாழ்க்கையை விட்டொழிக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் சுதந்திர மனிதனாக வாழ வழி செய்ய வேண்டும்.
ராஜபக்சவினர் தமது குடும்பத்தில் ஒருவரை மீண்டும் அதிபராக்க முயல்கின்றனர். இது மீண்டும் நாட்டை அழிப்பதற்கான முயற்சி.
எந்த மனிதருக்கும் எந்த வேலையும் செய்ய முடியாத காலம் வரும். உடல் பலமும், மனவலிமையும் குறைந்துள்ளதை உணர்ந்து, மக்கள் நிராகரிக்க முன் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். அதிகார மோகம் என்னிடம் இல்லை.
இத்தருணத்தில் நாட்டில் பணவீக்கம்,வாழ்க்கைச் சுமை, ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் பொருளாதாரத்தையும், தேவைகளையும் சுருங்கச் செய்கிறது. பொருளாதாரத்தையும் தேவையையும் அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவர முயல்கின்றனர். அது தவறான செயல்” என்றார்.