ஐக்கிய மக்கள் சக்தியின் பத்தேகம தொகுதியின் பிரதான அமைப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்கு வந்த ஒருவர் தன்னை திட்டியதுடன் கொலை செய்ய போவதாக மிரட்டியதாகவும் காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பத்தேகம தொகுதியின் பிரதான அமைப்பாளருமான பந்துலால் பண்டாரிகொட, காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பந்துலால் பண்டாரிகொட நேற்று அதிகாலை தனது வீட்டு முற்றத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது, தலைகவசம் அணிந்த, தலைமுடி வளர்த்த ஒருவர் வீட்டுக்கு வந்து, வழி கேட்டதாகவும் பின்னர் அதிகம் துள்ள வேண்டாம் எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டுள்ள பண்டாரிகொட,
நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, முற்றத்தை கூட்டி பெருக்கி சமய வழிபாடுகளில் ஈடுபடுவதை பழக்கமாக செய்து வருகிறேன்.
கொலை மிரட்டல்
தாடி, நீளமாக தலைமுடியை வளர்த்த தலைகவசம் அணிந்த ஒருவர் வீட்டுக்கு வந்து வீதி ஒன்றுக்கு செல்லும் வழியை கேட்டார். எங்கு என்று நான் கேட்டேன். அப்போது அதிகம் துள்ள வேண்டாம், கொன்று விடுவேன் என மிரட்டினார்.
வீதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததுடன் அந்த நபர் அதில் ஏறி தப்பிச் சென்றார் எனக் கூறியுள்ளார்.
பந்துலால் பண்டாரி நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.