செய்திகள்

பேராதனை பல்கலைக்கழக மாணவன் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை – மரண தண்டனை உறுதியானதுபேராதனைப் பல்கலைக்கழக மாணவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

1997ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக முதலாம் ஆண்டில் கல்வி கற்ற செல்வநாயகம் வரப்பிரகாஷ் அந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்று சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி உயிரிழந்தார்.

சாட்சியங்களின்ப பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்களும், பகிடிவதையில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களும் பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் என தெரியவந்திருந்தது.

அரச தரப்பின் முதல் சாட்சி, இறந்தவரைப் பார்த்தபோது அவர் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தார் என்று தெரியவந்ததுடன், (எழும்பு – இரு) என்ற உடற்பயிற்சியில் அவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் பொறியியல் பீடத்தில் இருந்து இரண்டாம் ஆண்டு மாணவர்களின் இருப்பிடத்திற்கு அழைத்து செல்லப்பட்டே பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் இரண்டு புகைப்படங்களை, கொண்டு அவர்களை சிகிச்சைப் பெற்று வந்தபோது வரப்பிரகாஷ் அடையாளம் காட்டியுள்ளார்.

அத்துடன் உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனையின் போது அவர் தசைக் காயம் காரணமாக ஏற்பட்ட கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்திருந்தார்.

அதிக உடல் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாகவே இறந்தவருக்கு உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனைக் கொண்டு, மேன்முறையீட்டு நீதிமன்றமும் கொலையைச் செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டவர் தனது நடவடிக்கையைப் பற்றித் தேவையான அறிவைப் பெற்றிருந்தார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது.

பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரன் இந்த வழக்கில் முதல் பிரதிவாதியாக இருந்தபோதும், வழக்கின் ஆரம்பம் முதல் நீதிமன்றத்தில் அவர், முன்னிலையாகாத நிலையில், இந்தக் குற்றத்தைச் செய்ததாக எட்டு மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணை முடிவடைந்ததையடுத்து, கண்டி நீதவான் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவரை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு பாரப்படுத்தினார்.

பின்னர், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் அவர்களில் ஒருவர் சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் பிரதான குற்றவாளியான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரன் உட்பட்ட இரண்டாவது குற்றவாளிகள் கண்டி மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இதில் இரண்டாவது குற்றவாளி விசாரணையின் பின்னர் 2014இல் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து முக்கிய குற்றவாளி, நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் அதனை ஆட்சேபித்து அவர், சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீது விசாரணையை மேற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றமே, முக்கிய குற்றவாளிக்கான கண்டி நீதிமன்றின் முன்னைய தீர்ப்பை உறுதிசெய்துள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *