Uncategorized

சீனாவுக்குப் புத்துயிர் கொடுக்கும் இந்தியா – ஓரக் கண்ணால் பார்க்கப்படும் தமிழர் விவகாரம்!Courtesy: அ.நிக்ஸன்

சீனாவும் இந்தியாவும் வர்த்தகம் உள்ளிட்ட பல நிலைகளில் உரையாடல் வழிமுறைகளை நிறுவியுள்ளன. இந்தியக் குடிமக்கள், இந்திய மாணவர்கள் சீனாவுக்குச் செல்வதற்கான விசா விண்ணப்ப முறைகளை சீனா மேலும் மேம்படுத்தியுள்ளது.

ஆனால் தேச நலன் என்ற போர்வையில் தமிழர் விவகாரத்தை புதுடில்லி ஓரக் கண்ணால் பார்க்கிறது.

ரஷ்யா – உக்ரெயன் போர்ச் சூழலில், ரஷ்யாவைத் தனிமைப்படுத்த ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ள கடும் முயற்சிகளுக்கு மத்தியில், சீனா தனித்து நின்று ரஷ்யாவுக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றது.

ஆனால் இதுவரையும் சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் எதனையும் வழங்காத சூழலில், ரஷ்யாவை ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள் முன்னிலையில் தனித்துவம் மிக்கதாகக் காண்பிக்கவே சீனா முற்படுகின்றது.அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று உலக அரசியல் ஒழுங்கில் மாற்றத்தைக் காண முற்படும் சீனா, முடிந்தவரை அமெரிக்காவுடன் இணங்கிச் செல்லும் காய்நகர்த்தல்களிலும் ஈடுபடுகின்றது.முன்னர் அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்த அதே அணுகுமுறையைச் சீனா தற்போது கன கச்சிதமாகக் கையாள ஆரம்பித்துள்ளது.

இந்தியாவின் வல்லாதிக்க கனவு

சீனாவுக்குப் புத்துயிர் கொடுக்கும் இந்தியா - ஓரக் கண்ணால் பார்க்கப்படும் தமிழர் விவகாரம்! | China India Student Visa Tamil Peoples Russiaசீன – ரஷ்ய உறவின் பின்னணியிலேயே இந்தியாவும் மூலோபாயங்களை வகுத்தாலும், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தனித்த வல்லாதிக்கம் மிக்க நாடாக மிளிர வேண்டுமென்ற இந்தியக் கனவுக்கு, அமெரிக்கா இடம்கொடுப்பதாக இல்லை. சீனாவும் அதனை விரும்பாது.


இந்தியாவை ஒரு மூலோபாய போட்டியாளராகவோ அல்லது எதிரியாகவோ சீனா ஒருபோதும் கருதியதில்லை என பங்களாதேஸில் உள்ள சீனத் தூதுவர் லி ஜிமிங் தெரிவித்துள்ளார்.


டாக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தூதுவர் லி ஜிமிங் பொருளாதார புவிசார் அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் சீனாவும் நெருக்கமாக இணைந்து செயல்பட முடியுமெனக் கூறியதாக சேர்ச்ரவுண்ட் (searcharoundweb) என்ற இணையத்தளம் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த அரசியல் பின்னணியில் பரஸ்பர மரியாதை, அமைதியான சகவாழ்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் புதிய அரசியல் சகாப்தத்தில் ஒருவருக்கொருவர் பழகுவதற்கான சரியான வழியைக் கண்டறிய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருக்கிறார்.


அமெரிக்க – சீன உறவுகளுக்கான தேசியக் குழுவின் வருடாந்த காலா விருந்து நிகழ்வுக்கு (Annual Gala Dinner) அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே ஜி ஜின்பிங் இவ்வாறு கூறியதாக ஹின்குகா ((Xinhua) செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


முரண்பாடுகளில் உடன்பாடாக இவ்வாறான விருந்து வழங்கும் நிகழ்வுகள் இரு நாடுகளினதும் அரசியல் சமநிலைக்கு இடம்கொடுக்காது விட்டாலும், நேரடி மோதலைத் தவிர்ப்பதற்கான உத்தியாகக் கருத முடியும்.

உக்ரையன் போரில் பரீட்சிக்கப்படும் அமெரிக்க – சீனப் பலப்பரீட்சை

சீனாவுக்குப் புத்துயிர் கொடுக்கும் இந்தியா - ஓரக் கண்ணால் பார்க்கப்படும் தமிழர் விவகாரம்! | China India Student Visa Tamil Peoples Russia


பொருளாதார ரீதியான சர்வதேச வர்த்தக நகர்வுகளுக்கு அமெரிக்க சீன உறவின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் புரிந்துகொள்ளாமல் இல்லை. ஆனால் உலக அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில், அமெரிக்க – சீனப் பலப்பரீட்சை ரஷ்ய உக்ரையன் போரில் பரீட்சிக்கப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.


சீனா மீது அமெரிக்காவுக்கும் அமெரிக்கா மீது சீனாவுக்கும் இருக்கும் அச்சம் ஒன்றுக் கொன்று அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ள சூழலில், இருதரப்பு உறவுகளில் பரஸ்பர மரியாதை, அமைதியான சகவாழ்வு ஆகியவற்றில் உறுதியாக இருப்பதாக சீனா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்ற கருத்தையே ஜி ஜின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில் முன்வைத்திருக்கிறார்.


சீனாவின் குளோபல் ரைம்ஸ் (globaltimes) இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

அதாவது தற்போதைய உலக ஒழுங்கை மாற்றி அமைக்க முற்படும் சீனா, உலக ஒழுங்கின் பங்கேற்பாளராகவும் அமைதியின் பாதுகாவலராக இருப்பது போன்ற தோற்றப்பாட்டையும் காண்பிக்க முற்படுகிறது.


அதுவும் உக்ரெயன் போர், தாய்வான் நீரிணைப் பதற்றத்தின் மத்தியில் சீனா தன்னை அமைதியின் காவலனாகக் காண்பிக்கவே எத்தனிக்கிறது.

குறிப்பாக உலகம் இன்று அமைதியாக இல்லை என்று குறிப்பிட்ட ஜி ஜின்பிங், ஸ்திரத்தன்மையையும் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் சீனா ஒத்துழைக்கும் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.

அதாவது அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்ற செய்தி வெளிப்படுகின்றது.

ஆனால் சீன இன்ஸ்ரியுட் ஒஃப் இன்டர் நஷனல் (China Institute of International Studies) கற்கையின் மூத்த ஆராய்ச்சியாளர் யாங் சியு, (Yang Xiyu) தற்போதைய சீனா- அமெரிக்கா உறவுகள் கடினமான காலகட்டத்தில் இருப்பதாகக் கூறுகிறார்.

சீனா மீது அமெரிக்கா மேம்பட்ட அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும் இவர் குற்றம் சுமத்தியுள்ளார். சீனாவின் குளோபல் ரைம்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இக் கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

சீனாவுக்குப் புத்துயிர் கொடுக்கும் இந்தியா - ஓரக் கண்ணால் பார்க்கப்படும் தமிழர் விவகாரம்! | China India Student Visa Tamil Peoples Russia


ஆனால் தாய்வான் நிலைமை ‘இனி ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று சீனா முடிவு செய்துள்ளதாகவும், ‘பலத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட தீவின் மீது அழுத்தத்தை சீனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது’ என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கன் (Antony Blinken) கடந்த புதன்கிழமை ரொய்டர்ஸ் (Reuters) செய்தியாளரிடம் கூறியுள்ளார்.


அதேவேளை, தாய்வான் பிரச்சினையில் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்துமாறு சீனாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரான் கெஃபே, (Tan Kefei) அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.


இதேவேளை, கடுமையான போட்டியை எதிர்நோக்கியிருப்பதாகவும், ஆனால் அது மோதல் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாக வோசிங்டன் ரைம்ஸ் (Washington Times) கூறியுள்ளது.


‘அமெரிக்காவின் மிகவும் பின்விளைவுப் புவிசார் அரசியல் சவால்’ என்று அடையாளம் காட்டும் ஜோ பைடனின் பாதுகாப்பு உத்தி, சீனா மீதான அதீத கவனத்தை வெளிப்படுத்துகின்றது.


ஆனால் தற்போதைய அமெரிக்கக் கொள்கைகள் மற்றும் சீனா மீதான விரோதப் போக்குகள் அனைத்தும் உண்மையில் சீனா விரைவில் பெரியதாகவும் வலுவாகவும் மாறும் என்ற அச்சத்தால் உந்துதல் பெற்றதாகச் சீனாவின் குளோபல் ரைம்ஸ் செய்தி நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.


ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் தாய்வான் விவகாரம் ஆகியவற்றோடு அமெரிக்கா எடுத்துள்ள கடும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் உள்ளக அரசியல் – பொருளாதாரச் செயற்பாடுகளில் பாதிப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் குளோபல் ரைம்ஸ் செய்தி நிறுவனத்தின் விமர்சனத் தொனி வெளிப்படுகின்றது.இந்த நிலையில், அமெரிக்க – சீன உறவு தொடர்பாக சீன அதிபர் கூறிய கருத்துக்கள் அமெரிக்காவினால் எந்தளவு தூரம் ஏற்கக்கூடியதாக இருக்கும் என்பது கேள்வி.

தாய்வான் மீதான சீன ஆக்கிரமிப்பு, மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடல் பயணம் உள்ளிட்ட பொருளாதாரம் – பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆபத்து என்ற கோணத்திலேயே அமெரிக்கா கருதுகின்றது.


அத்துடன் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குச் சீனா வழங்கும் ஆதரவும் உலக அரசியல் ஒழுங்கில் சீனச் சார்ப்பு அதிகார மையத்தைத் தோற்றுவிக்கும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு உண்டு.

சீனாவின் வளர்ச்சியினால் உலகில் ஏற்படவுள்ள பாதிப்பு

சீனாவுக்குப் புத்துயிர் கொடுக்கும் இந்தியா - ஓரக் கண்ணால் பார்க்கப்படும் தமிழர் விவகாரம்! | China India Student Visa Tamil Peoples Russia


அமெரிக்காவின் இவ்வாறான அச்சங்கள் சீனா மற்றும் ரஷ்ய ஆதரவு நாடுகளைத் தவிர ஏனைய அனைத்து நாடுகளிடமும் உண்டு. இலங்கை போன்ற சிறிய நாடுகள், சீனாவிடம் உதவியைப் பெற்றாலும் அமெரிக்க – இந்திய அரசுகளின் தேவை கருதியும் செயற்படுகின்றன.


ஆனால், சீனாவின் வளர்ச்சியினால் உலகில் ஏற்படவுள்ள பாதிப்புகள் பற்றி இலங்கை அலட்டிக்கொள்வதில்லை. அத்தோடு சீனாவும் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்குக் கடன்களை அள்ளிக் கொடுக்கிறது.


ஆனால் ஈழத்தமிழர்கள் எப்போதுமே சீனா தொடர்பான முன் எச்சரிக்கையோடுதான் செயற்படுகின்றனர். இருந்தாலும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மிக அருகில் இருக்கும் இந்தியா, ஈழத்தமிழர் விவகாரத்தில் காண்பிக்கும் அலட்சியப்போக்கும் சிங்கள ஆட்சியாளர்களை மாத்திரம் நம்பிச் செயற்படுகின்ற அணுகுமுறைகளும் ஈழத்தமிழர்களிடம் நம்பகத்தன்மையை இல்லாமல் செய்கின்றன.


இப்பின்புலத்திலேதான் உலக அரசியல் ஒழங்கு மாற்றங்கள் உருவாக்கப்போகும் விளைவுகள் தொடர்பாகச் சிறிய தேசிய இனமான ஈழத்தமிழ்ச் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல் உண்டு.

இந்திய – சீன உறவு பற்றிய புரிதலும் அவசியம்.

ஏனெனில் புதுடில்லியில் சீனாவுக்கான இந்தியத் தூதுவராகப் பதவி வகித்த சன் வெய்டாங், தனது மூன்று வருடகாலப் பதவியைப் பூர்த்தி செய்யும் பிரியாவிடை நிகழ்வில் கூறிய கருத்துக்கள், இந்திய – சீன உறவின் தன்மையைப் பகிரங்கப்படுத்தியுள்ளன.


சீனாவும் இந்தியாவும் ‘புவிசார் அரசியல் பொறியிலிருந்து’ வெளியேற வேண்டும் என்று தூதுவர் சன் வெய்டாங் கூறியிருக்கிறார். சீன – இந்திய உறவு என்ற நிலையில் இருந்து அயல் நாடுகளாகவும் உறவைப் பேண முடியாத போட்டி மன நிலையில் இருப்பது ஆரோக்கியமல்ல என்ற தொனியையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.‘சீனாவும் இந்தியாவும் ஒன்றாக வளர்ச்சியடைய உலகில் போதுமான இடம் உள்ளது, மேலும் இரு நாட்டு மக்களும் அமைதியாக வாழவும் ஒத்துழைப்பை அடையவும் ஒரு வழியைக் கண்டறியப் போதுமான ஞானம் இருக்க வேண்டும்’ என்றும் தூதுவர் சன் வெய்டாங் இடித்துரைத்திருக்கிறார்.


ஆகவே சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க – சீன உறவின் தேவைப்பாடு பற்றிப் பேச, புதுடில்லியில் தனது தூதுவர் பணியை நிறைவு செய்து வெளியேறிய சன் வெய்டாங் சீன – இந்திய உறவு தொடர்பாகக் கருத்திடுகிறார்.எனவே முரண்பாடுகளில் உடன்பாடாக அமெரிக்க – இந்திய உறவுகளை விரும்பும் சீனா, தனது புவிசார் அரசியல் – புவிசார் பொருளாதார நகர்வுகள் அதற்கான ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை நியாயப்படுத்திக் கொண்டுதான் அந்த உறவையும் எதிர்பார்க்கின்றது.

ஜோ பைடனின் பாதுகாப்பு உத்தி

சீனாவுக்குப் புத்துயிர் கொடுக்கும் இந்தியா - ஓரக் கண்ணால் பார்க்கப்படும் தமிழர் விவகாரம்! | China India Student Visa Tamil Peoples Russia


இந்த இடத்தில் அமெரிக்கா குறிப்பாக ஜோ பைடனின் பாதுகாப்பு உத்தி. இலகுவில் சீன உறவுக்கு வலுச் சேர்க்க ஒத்துழைக்கும் என்று கூற முடியாது.

சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்கச் சீனத் தொடர்பாடல் வேறு நகர்வாக இருந்தாலும், புவிசார் அரசியல் பின்புலம் என்ற பார்வையில் தன்னை மாத்திரம் நியாயப்படுத்தி உறவைப் பேண சீனா விடுக்கும் அழைப்புகளை அமெரிக்கா நிராகரித்தே வந்துள்ளது.


ஆனால் இந்தியா முடிந்தவரை சீனாவுடன் உறவைப் பேணவே விரும்புகிறது. ஏனெனில் ரஷ்ய – இந்திய உறவு அதற்குப் பிரதான காரணம்

அத்துடன் சீனாவும் இந்தியாவும் பல்வேறு நிலைகளில் உரையாடல் வழிமுறைகளை நிறுவியுள்ளன.

இந்தியக் குடிமக்கள் சீனாவுக்குச் செல்வதற்கான விசா விண்ணப்ப செயல்முறையை சீனா மேலும் மேம்படுத்தியுள்ளது.

நீண்ட காலப் படிப்பைத் தொடரும் மாணவர்கள் மற்றும் வர்த்தகம், வேலை வாய்ப்பு மற்றும் குடும்பமாக இருப்போருக்கான விசா விண்ணப்பங்களையும் சீனா மீண்டும் செயல்படுத்தியுள்ளது.


இன்றுவரை வரை இந்திய மாணவர்களுக்கு ஆயிரத்து எண்ணூறுக்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன, சீன இந்திய அரசுகளிடையே புரிந்துணர்வுடன் அனைத்துப் பரிமாற்றங்களும் நன்றாகச் செயற்படுத்தப்படுகின்றன.

புதுடில்லியால் கையாளப்படும் சில தமிழ்த்தரப்புக்கள்

சீனாவுக்குப் புத்துயிர் கொடுக்கும் இந்தியா - ஓரக் கண்ணால் பார்க்கப்படும் தமிழர் விவகாரம்! | China India Student Visa Tamil Peoples Russia


சீன – இந்திய உறவு பற்றி குளோபல் ரைம்ஸ் பகிரங்கப்படுத்தியுள்ளது.

சீனாவைப் பொறுத்தவரை தன்னை அமைதியின் நாயகனாகக் காண்பித்துக் கொண்டு உலக அரசியல் ஒழுங்கில் தனது அதிகாரத்தைப் பலப்படுத்தவே முற்படுகின்றது என்பது பகிரங்கம்.


சீனாவின் இந்த அணுகுமுறை ஆசியப் பிராந்தியத்தில் உள்ள இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு ஆபத்தான ஒன்று. இந்தியாவுக்கு இந்த ஆபத்துக்கள் புரியாமலில்லை.

ஆனால் புதுடில்லியைப் பொறுத்தவரை வட இந்தியப் பாதுகாப்பும் தனது தேச நலனும் மாத்திரமே பிரதான நோக்கமாக உள்ளது.

அதனாலேயே முரண்பாட்டில் உடன்பாடாகச் சீன உறவை மேம்படுத்த இந்தியா முனைகிறது.

இந்தோ – பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரம் என்று வரும்போது, சிங்கள ஆட்சியாளர்கள் அமெரிக்க – இந்திய நிலைப்பாட்டுக்கு ஆதரவாகச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையும் இந்தியாவுக்கு உண்டு.


இதன் காரணமாகவே ஈழத்தமிழர் விவகாரத்தைச் சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இந்தியா கையாளுக்கின்றது. அதற்கேற்ப சில தமிழ்த் தரப்புகள் புதுடில்லியால் கையாளப்பட்டும் வருகின்றன. Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *