
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை பதிவிறக்கம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தரவுத்தளத்திற்குள் பிரவேசித்து, பாடசாலை பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் பரீட்சார்த்திகள் தமது அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பரீட்சார்த்திகள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.