
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்சங்க செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.
வவுனியா ஊடகஅமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ்மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாத நிலையில் 37 கோடி ரூபாய்களை செலவளித்து சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. எமக்கான சுதந்திரம் 75 வருடங்களாக கிடைக்கவில்லை. எமக்கான உரிமைகள் கிடைக்காத நிலையில் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை.
அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு
எனவே அன்றைய தினம் நான்காம் திகதி வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணிக்கு வலுச்சேர்க்கும் விதமாக அனைத்துதரப்புகளும் ஒன்று திரளவேண்டும் என்று நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் விதமாக வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அரசியல் வேறுபாடுகளின்றி
எனவே குறித்த பேரணியில் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒண்றிணைவதுடன், பொது அமைப்புக்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” எனவும் தெரிவித்துள்ளார்.