இலங்கையிலிருந்து படகு மூலம் பிரான்ஸ் செல்லும் இலங்கையர்கள்; வெளியான புதிய தகவல்,,…..

மீனவர்கள், மீன்பிடிப் படகுகள் மூலம் பிரான்ஸிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலநாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கக் கூடிய வசதியுடைய படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்லும் சில மீனவர்கள் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் பிரான்ஸின் தீவு ஒன்றில் குடியேறும் புதிய முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

பல நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கச் செல்லும் சில மீனவர்கள் நடுக் கடலில் குறித்த படகினை நீரில் மூழ்கச் செய்துவிட்டு, வேறு படகு மூலம் பிரான்ஸின் ப்ரியூனியன் என்னும் தீவைச் சென்றடைகின்றனர் என அகில இலங்கை பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுஜித் சமந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

திக்ஓவிட்ட மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று படகுகளைச் சேர்ந்த மீனவர்கள் ஏற்கனவே தீவை நோக்கிப் பயணித்து வருகின்றனர்.

ஒன்றிரண்டு ஆண்டுகள் மீன்பிடியில் ஈடுபட்டு பின்னர் படகுகளை நீரில் மூழ்கச் செய்து பிரான்ஸில் குடியேற எத்தனிப்பதன் மூலம் படகு உரிமையாளர்கள் பெரும் நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

இந்த வகை படகு ஒன்றின் விலை 80 லட்சம் ரூபாவாகும், பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடிப்பதற்காக செல்லும் மீனவர்களுக்கு தேவையான உணவு எரிபொருள் என்பனவற்றுக்காக ஒரு தடவையில் பதினைந்து லட்சம் ரூபா செலவிடப்படுகின்றது.

இவ்வாறு சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்வதற்காக மீன்பிடிப் படகு ஒன்றை நீரல் மூழ்கடிக்கச் செய்வதனால் மாபெரும் நட்டத்தை எதிர்நோக்க நேரிடுகின்றது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூன்று மாதங்களுக்கு முன்னதாக பல நாள் தங்கியிருந்து மீன்பிடிக்கக்கூடிய தமது படகில் சென்ற ஆறு மீனவர்கள் பிரான்ஸிற்கு சென்றுள்ளதாகவும், படகு நீரில் மூழ்கடிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் படகு உரிமையாளரான சுனில் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் நோக்கி பயணிக்கும் மூன்று படகுகள் குறித்து வெளிவிவகார அமைச்சு, பொலிஸ் திணைக்களம் மற்றும் மீன்பிடித் திணைக்களம் என்பனவற்றுக்கு முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை என மீன்பிடிப் படகு சங்கத் தலைவர் சுஜித் தெரிவிரத்துள்ளார்.

6Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*