எமது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் நலன் கருதி பள்ளிவாசல்கள், குர்அன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகள் பதிவு செய்வதே எமது நிரந்தரப் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக அமையும்.

எமது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் நலன் கருதி பள்ளிவாசல்கள், குர்அன் மத்ரஸாக்கள்,
அரபுக் கல்லூரிகள் பதிவு செய்வதே எமது நிரந்தரப் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக அமையும் எனவும் இன்றைய காலத்தைப் பொறுவத்தவரையிலும் எங்களுடைய அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சு மற்றும் முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உடுநுவர மற்றும் யட்டிநுவர ஆகிய இரு தேர்தல் தொகுதிகளை ஒன்றிணைத்து இலங்கையில் முதன் முறையாக நடத்தப்பட்ட நடமாடும் சேவை 02-03-2019 ஆம் திகதி தவுலகல வஹங்கே அல் அறபா மஹா வித்தியாலயத்தில முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையில் இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து தலையுரை உரையாற்றும் போது
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைப் பற்றி ஒரு சரியான கவனத்தை கொண்;டதாகத் தெரியவில்லை.

ஆரம்ப காலங்களில் இதற்கு அமைச்சர்களாக எம். எச். முஹமட், எம். எச். எம். அஷ்ரப், அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் எச். எச். எம். அஸ்வர், அதைத் தொடர்ந்து சில சிங்கள அமைச்சர்மார்களின் கீழ் செயற்பட்டு வந்தன.

அந்ததந்தக் காலங்களில் அக்காலத்தின் சூழல் தேவைக்கு ஏற்ப செயற்பட்ட போதிலும் கூட அக்கால கட்டத்தையும் இக்கால கட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இன்று முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைப் பற்றிய பாரிய பொறுப்பு இருக்கிறது.

இந்த நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் பலவிதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வாழக் கூடிய ஒரு துர்பாக்கிய நிலைமையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே இன்றைய காலத்தைப் பொறுவத்தவரையிலும் நாங்கள் எங்களுடைய அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மிகவும் சிறிய இடத்தில் அமைந்திருந்தது. இதனை பரந்த பட்ட மட்டத்தில் விஸ்தரித்து பெரிய கட்டிடத் தொகுதியில் நிர்மாணித்து அதை மாற்றியமைத்துள்ளோம். இது தொடர்பாக எமது பிரதமர் ரனில் விக்கிரமங்கவைச் சந்தித்து கதைத்த போது பிரதமர் 296 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கி அமைச்சின் கட்டிடத் தொகுதியை நிர்மாணித்து திறந்து வைக்கும்படி கூறினார். அந்த வகையில் அதற்குரிய கட்டிடத்தில் முஸ்லிம் சமயம் கலாசார அமைச்சு இன்று இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் அக்குறணைப் பிரதேசத்திற்கு அடுத்தததாக உடுநுவரப் பிரதேசம் திகழ்கிறது. அன்றைய கால கட்டத்தில் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அலுவலகம் வந்த போது ஒரு சரியான இடவசதியின்மை அன்று காணப்பட்டது. ஆனால் அந்த நிலைமை மாறி இன்று ஒரு அழகிய தோற்றத்திலுள்ள கட்டிடத்தில் எமது சகல அலுவலக வேலைகளை செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த அமைச்சை நான் பொறுப்பேற்கும் போது விசேடமாக கடந்த காலங்களிலே எமது பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. அப்போது நாங்கள் இந்த நாட்டில் அனாதைகளாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோம். எம்மைப் பாதுகாப்பதற்கு யாரும் இருக்க வில்லை. எமக்கு உதவ எவரும் முன்வரவும் இல்லை.

இப்படியான ஒரு இக்கெட்டான சூழ்நிலையிலேயே வாழ்ந்திருந்தோம். கடைசியாக நீதி கேட்டு நீதி மன்றம் சென்ற போது அன்று நீதி மன்றங்களிலே எங்களைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசலா என்று கேட்டார்கள்.

துரதிருஷ்டவசமாக அநேகமான பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்கள் இருந்தன.

அதனால் அந்த வழக்குகள் தொடர முடியாமல் இடை நிறுத்தப்பட்டன. இந்த அவல நிலையைக் கருத்திற் கொண்டுதான் பள்ளிவாசல் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திக் கூறி வருகின்றேன்.

பள்ளிவாசல் மட்டுமல்ல குர்ஆன் மத்ரஸாக்கள், தைக்காப் பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள் ஆகிய அனைத்தும் நாங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அக்கால கட்டத்தில் பள்ளிவாசல்கள் பதிவு செய்வதில் பல சிரமங்கள் இருந்தன. அப்போது பள்ளிவாசல்கள் பதிவு செய்வதாக இருந்தால் பல விதமான ஆணவங்கள் கோரப்பட்டன. விசேடமாக அருகிலுள்ள பௌத்த விஹாரையின் கடிதம் அப்போது தேவைப்பட்டது.

இப்படி பல விதமான ஆணவங்கள் பள்ளிவாசல் பதிவு செய்வதாக இருந்தால் ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.

இவை அனைத்தையும் நீக்கி மிக இலகுவானமுறையில் அந்த பள்ளிவாசலுக்கு உரிய காணி உறுதியிருந்தால் மட்டும் போதும் என்ற வகையில் பள்ளிவாசல்களை பதிவு செய்வதற்கு விசேடமான சலுகையினை வழங்கி ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

ஆனால் எமது சமூகம் பெரியளவில் கவனத்தில் கொள்வதில்லை என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதில் பெரு எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.

25 புதிய பள்ளிவாசல்கள் பதிவு செய்யவும், 14 புதிய நிர்வாகத் தெரிவை பதிவு செய்யவும், 3 பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளவும் 14 புதிய குஆன் மத்ரஸாக்கள் பதிவு செய்யவும் ஒரு குறைபாடும் 10 பள்ளிவாசல்களில் காணப்படும் கட்டிடக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உதவி வழங்குதல் மற்றும் 14 புதிய பள்ளிவாசல்களுக்கு பதிவுச் சான்றிதழ்கள் வழங்கி வைத்தல் உள்ளிட்ட 79 விடயங்கள் அடையாளங் காணப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்ட முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். ஆர். எம். மலீக், முஸ்லிம் சமயம் கலாசாரம் அமைச்சின் பணிப்பாளர் ஏ. பீ. எம். அஷ்ரப் அமைச்சரின் உயர் அதிகாரிகள் முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அலுவலக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுலாப்தீன் லாபீர், ஹிதாயத் சத்தார். உடுநுவர பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டர்.

5Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*